Saturday, December 16, 2006

கொள்கைப் பித்து

கொள்கைக்காக மாண்டவர் உண்டு , கொள்கைக்காக வாழ்வின் பல இன்பங்களை தொலைத்தவரும் உண்டு ஆனால் கொள்கையை கடைபிடித்து அதனால் இன்பம் பெற்று வாழ்ந்தவர் உண்டா?

ஒருவரிடம் போய் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்று கேட்டால் "இது என் கொள்கை" என்பார். ஏன் இந்த கொள்கையை கொண்டுள்ளீர்கள் என்று கேட்டால் 'இது சிறந்ததாக எனக்குப் படுகிறது' என்று சொல்வார். அதாவது அவருடைய ரசனை அது, ஒருத்தருக்கு இனிப்பு பிடிக்கும், இன்னொருவருக்கு காரம் பிடிக்கும் , இனிப்பு பிரியரிடம் போய் உனக்கேன் காரம் பிடிக்கவில்லை என்று சண்டை போட முடியாது. மாற்றுக்கொள்கை கொண்டவரும் அது போலத்தான். கொள்கைக்காக சண்டைபோடுவது வீண்வேலை.


'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்கிறார் பாரதியார். அதாவது அடிமைத்தனம் நம்மீது திணிக்கப்படும் ஒன்று , அந்த அடிமைத்தனத்தயே மோகித்திருப்பது அதனினும் கீழான இழிநிலை.

இதனைவிட இழிவான நிலை தானே விரும்பி அடிமையாகி அந்த அடிமைத்தனதை மோகித்திருப்பது. தனக்குத் தானே செய்துகொள்ளும் அடிமைத்தனம் கொள்கைக்கு அடிமையாவது, போதை பொருட்களுக்கு அடிமையாவது போன்றவை. இந்த நிலையை மோகித்திருப்பதால் இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபடுவது நலம்.


அதற்காக கோட்பாடற்று மிருகம்போல் திரிய வேண்டியதில்லை.
கொள்கை உப்பைப்போன்றது , அது இல்லாவிட்டால் வாழ்வு ருசிக்காது, அதிகமகவும் இருக்கக்கூடாது.

Tuesday, December 05, 2006

சங்கீத சீசன் சந்தேகம்

சங்கீத சீசன் துவங்கப்போகிறது,
'தமிழில் ஏன் பாடுவதில்லை' போன்ற கேள்விகள் இந்த வருஷமும் வரும். வரட்டும்.

நான் சொல்ல வந்த விஷயமே வேறு.
சில சபாக்கள்ளிலும் டிவி யில் வரும் மார்கழி மாச ஸ்பெசல் இசை நிகழ்ச்சிகளிலும் இரண்டு பாட்டுக்கு நடுவே ஆடியன்ஸ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் சடங்கு நடைபெறும்.

நான் 3 - 4 வருஷமாக பார்க்கிறேன், ஆண் இசை வல்லுனர்கள் தமிழில் கேட்க்கப்படும் கேள்விக்கு தமிழில் பதில் அளிப்பார்கள். பெண்பாடகிகளிடம் தமிழில் கேள்வி கேட்டாலும் பீட்டர் பாஷையில் "திஸ் ராகா இஸ்" என்று ஆரம்ப்பித்து ஜல்லியடிப்பார்கள். சில விதிவிலக்குகள் உண்டு ( அருணா சய்ராம் சௌம்யா இருவரும் நல்ல தமிழில் பதில் அளிப்பார்கள்). முன்பு சுப்புடு அவர்கள் ஒரு பெண் கலைஞரை "அவர் ஏப்பம் கூட ஆங்கிலத்தில் தான் விடுவார்" என்று குறிப்பிட்டார்.

பொதுவாக, பெண் பாடகிகளுக்கு இப்படி ஒரு ஆங்கில மோகம் ஏன்?