Tuesday, October 31, 2006

கார்காலத்தில் கார் ஓட்டுவது

சென்னை மழையை பற்றி தீபக் எழுதிய பதிவை பார்த்ததும் இதை எழுத தோன்றியது. மழை பெய்தால் சென்னையில் என்னை போன்ற கார் ஓட்டிகளுக்கு ஜாலி . பைக் ஆசாமிகள் குறுக்கே வரமாட்டார்கள் , நிம்மதியாக வண்டி ஓட்டலாம். மழை இல்லத போது என்ன தான் நாம் சொகுசு வண்டியில் குளு குளு என்று போனாலும் , பொசுக் பொசுக் என்று சந்தில் புகுந்து விர்ரென பறக்கும் பைக்குகளை பார்த்தால் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை ஏற்ப்படும் . மழையில் பைக்காரர்கள் வண்டியை ஓரம்கட்டி பெட்டிகடை, பஸ்ஸ்டாப் என்று ஒதுங்குவதை சாடிச புன்னகையுடன் பார்த்துக்கொண்டு தண்ணீரை இருபக்கமும் வாரித்தெளித்தப்படி போகும் போது கிடைக்கும் திருப்தியே தனி தான். இதெல்லாம் மழை விடும் வரை தான், மழை விட்டவுடனே ஓரம்கட்டிய எல்லா பைக்குகளும் ரோட்டில் ஆஜர் ஆகி கர் புர் என்று சத்தம் போட்டபடி ட்ராபிக் ஜாம் ஆக்குவார்கள். கார் ஓட்டிகள் மழை பலமாக அடித்துக்கோண்டிருக்கும் போது கிளம்பிவிடவேண்டும் , சீக்கிரம் போய்விடலம். மழை விட்டுதோ போச்சு . பயணம் நாஸ்தி தான்.

தோசை போஸ்ட் மார்டம்

பெங்களுர் ஸ்டைல் சாப்பாடு போர் அடித்ததால், சென்னை சரக்கு சாப்பிட CMH ரோட்டில் உள்ள அடையார் ஆனந்த பவன் போனேன். அங்கே ஒரு யுவனும் யுவதியும் ஒரே தோசையை ஒரே தட்டில் காதலுடன் சட்னி கசிந்துருக சாப்பிட்டனர், ஒரே இளநீரில் இரன்டு ஸ்ட்ரா ஒரே கூல் ட்ரிங்க்கில் இரண்டு ஸ்ட்ரா என்று காதல் காட்சிகளை பார்த்த எனக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது . ஒரு விசேஷம், இருவரும் தோசையை ஸ்பூனால் சாப்பிட்டனர் , ஆளுக்கு இரண்டு ஸ்பூன், அதில் ஒரு ஸ்பூனால் தோசையை தட்டோடு அழுத்தி இன்னொரு ஸ்பூனால் கொஞ்சம் சாம்பாரை அபிஷேகம் செய்து , ஸ்புனால் ரம்பம் போல் ராவி தோசையை பிட்டு உள்ளே தள்ளினர்.
முறுகல் தோசையை செத்த பிணம் போல் போஸ்ட் மார்டம் செய்தது தோசை பிரியனான என்னை கடுப்பேற்றியது.
சாப்பிடும் முறை தெரியாமல் பல உணவுகளை ஆர்டர் செய்து சொதப்புவது இந்தியர்களுக்கு கைவந்த கலை.

அதிலும் சில அமெரிக்க ரிட்டர்ன் தேசிக்கள் வடை சாப்பிடுவதை பார்க்க சூப்பராக இருக்கும் . வடையை அப்படியே சாம்பாரில் தோய்த்து கடிப்பார்கள் . டீக்குள் பிஸ்கட் தோய்த்து சாப்பிடுவதைப்போல. கண்றாவி.

-----------
சனி பெயர்ச்சி "குரு" பெயர்ச்சி போல ராமதாஸ் கூட்டணி பெயர்ச்சி நடக்கும் போல இருக்கிறது. திமுக பச்சை துரோகம் செய்துள்ளது என்று சொல்கிறார். பச்சை அதிமுக கலர். திமுக மஞ்சள் துரோகம் மட்டுமே செய்யும்.

Monday, October 30, 2006

இது கொஞ்சம் Hilarious

நேற்று காலை கம்பனி கெஸ்ட் ஹவுசில் இருந்து நண்பன் வீட்டிற்க்கு குடி மாறினேன், 6 மணிக்கு எழுந்த பிறகு ரெடியாக வேண்டி ஷேவிங் செய்ய ப்ரஷ்ஷில் க்ரீமைத்தடவி முகத்தில் தேய்த்தேன் , ஒரு நறுமணம், என்ன இது இப்படி ஒரு மணம் வீசுதே என்று பார்த்தால், நான் ப்ரஷ்ஷிலிட்டது ... அட டூத்பேஸ்ட்.

Friday, October 13, 2006

Orkut குழுக்கள்

ஒர்குட்' ல் எது எதற்கெல்லாம் குழு அமைப்பது என்று ஒரு வரன்முறையே இல்லாமல் போய்விட்டது .
பள்ளி / கல்லூரி பஸ்ஸில் ஒரு குறிப்பிட்ட தடத்தில் செல்பவர்கள் கூட குழு ஆரம்பித்து விட்டார்கள்,

அதான் தினமும் ஒரே பஸ்ஸில் ஒண்ணா போறங்களே அப்பவே பேசிக்கலாமே , இவங்களுக்கு எதுக்கு ஒர்குட் குழு?

இது ஒரு ஒர்குட் குழுவே இல்ல அப்படினு ஒரு குழு (ஆய்யோ சாமி!! தாங்க முடியலடா!)) இருக்கு (This is not an orkut commmunity) .

ஒர்குட்ல சிலபேர் நூத்துக்கணக்கான குழுவில உறுப்பினரா இருக்காங்க, எல்லா குழுவில நடக்கற எல்லா த்ரெட் டையும் எப்படி பாப்பாங்க? படிப்பாங்க? இல்ல சும்மாவாச்சும் மெம்பர் ஆகி பிலிம் காட்டுறாக்களா?

நிறைய குழுவில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு (Member of Too many communities) ஒர் தனி குழு வேற இருக்கு (அட தேவுடா) .

Thursday, October 12, 2006

ந்யூமெராலஜி என் அனுபவம்

ந்யூமெராலஜியை பற்றிய முந்தய பதிவில் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். இந்தப்பதிவு சோதிடப்பித்து மக்களை எப்படி பிடித்துக்கொண்டு ஆட்டுவிக்கிறது என்பதை பற்றிய என் சொந்த அனுபவம்.
நான் +2 படித்த போது, எங்கள் பள்ளியில் ஒரு அறிவியல் கண்காட்ச்சியை நடந்தது, நானும் என் நண்பன் பாஸ்கரும் கொஞ்சம் கணிணி ஆர்வம் கொண்டத்வர்கள் அதனால் கணிணி அறிவியல் ஆசிரியை திருமதி கவுரி அவர்கள் எங்களை ஏதாவது ஒரு திட்டத்தை செய்யச்சொன்னார்கள்.
நாங்கள் சில நாட்கள் யோசித்து விட்டு ஒரு ந்யூமெராலஜி செயலியை செய்ய முடிவு செய்தோம்.

ஒரு "எண் கணித மேதை" எழுதிய புத்தகம் கிடைத்தது. அதை வைத்து பெயர், பிறந்த நாள் இத்யாதிகளைகொடுத்தால் பலன்களைச்சொல்லும் வகையில் ஒரு நிரலை உருவாக்கினோம்.
ஆப்போதய (1996) கம்ப்யூட்டர்களில் GUI கூட கிடையாது, நாங்கள் ஒரு Monochrome Monitor உதவி கொண்டு BASIC மொழியில் ஒரு நிரல் எழுதினோம்.

செயலி நன்றாக வேலை செய்தது. மற்ற மாணவர்கள் சில நல்ல செயலிகளை செய்திருந்தார்கள் . இந்தியாவின் அனைத்து ஊர்களை பற்றிய குறிப்புகளை வரைபடத்துடன் காட்டும் ஒரு நிரல், அறிவியல் தகவல்கள் பற்றிய ஒரு நிரல் என்று பல இருந்தன.
கண்காட்சி அன்று , மாணவர் , பெற்றோர், ஆசிரியர்களென அனைவரும் என் செயலி முன் அமர்ந்து சோதிடம் பார்த்தார்கள். மற்ற மாணவர்கள் கணிணி முன் அமர்ந்து ஈ ஓட்டினார்கள்.
பாஸ்கர் வேரு ஒரு திட்டதிலும் பங்கு பெற்றதால் அந்த வேலையை கவனிக்கச்சென்றுவிட்டான்.

நான் தனியாளக அனைவருக்கும் சோதிடம் பார்க்க வேண்டியதாயிற்று. எனக்கு பெருமிதமும், கடுப்பும் சேர்ந்து வந்தது. இரு நாட்களுக்குப்பிறகு ஒருவழியாக கண்காட்சி முடிந்தது. ஆனால் இன்று வரை மக்களின் சோதிடப்பித்தை பற்றி நினைத்து வருந்துகிறேன்.

Wednesday, October 11, 2006

ந்யூமெராலஜி- சில கேள்விகள்

சென்ற ஞாயிறு அன்று விஜய் டி வி யில் "நீயா, நானா" நிகழ்ச்சியில் ந்யூமெராலஜி பற்றி ஒரு விவாதம், ந்யூமெராலஜியை அறிவியல் பூர்வமானது என்று ஒரு கோஷ்டியும் இதனை எதிர்த்து ஒரு கோஷ்டியும் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

ந்யூமெராலஜி (பொதுவாக ஜோதிடமே ) ஒரு டுபாக்கூர் மேட்டர் என்பது என் கருத்து.

என் நெடு நாளைய கேள்வியை ஒருவர் கேட்டார், அது , "ந்யூமெராலஜிப்படி பெயர் மாற்றம் ஏன் எப்போதும் ஆங்கிலத்தில் தான் செய்யா வேண்டும், தமிழ் ந்யூமெராலஜி கிடையாதா" என்பதே.

இதற்கு மழுப்பலாக ஏதேதோ கூறினர் ந்யூமெராலஜியினர்.

எனக்கு ந்யூமெராலஜி பற்றி இன்னொரு கேள்வி உண்டு,

ந்யூமெராலஜி சித்தர்களால் (!) அருளப்பட்டதென்றால் ,கலியுகாதி, ஸாலிவாஹன, விக்கிரம, கொல்லம், ஹிஜிரி, திருவள்ளுவர் , 60 வருட தமிழ் சுழற்சி, என்று பல நாட்காட்டிகள் இருந்தும், ஏன் ஆங்கில நாட்காட்டியையே பயன் படுத்த வேண்டும் ?

இத்தனைக்கும் சில நூற்றண்டுகளுக்கு முன்பு, ஆங்கில நாட்காட்டியிலிருந்து 15 நாட்களை ஒரு போப்பாண்டவர் அப்பீட் செய்துள்ளார் .

அந்த மிஸ்ஸிங் நாட்களின் கோள் நிலைகளை இவர்கள் கணக்கில் சேர்த்துக்கொண்டார்களா என்று தெரியவில்லை.