Friday, June 08, 2007

பக்கத்து சீட்

"வேர் இஸ் டெஸ்க் நம்பர் 22?" என்று கேட்டபடி என் சீட்டுக்கருகில் வந்தாள் அவள், ஐடி பெண்ணுக்கே உரிய ஸ்வரூபத்தில், கையில் செல்ஃபோன், அதே கையில் சிறிய கைக்குட்டை, தோளில் டிசைனர் ஹேன்ட்பேக் , இன்னொரு கையில் டப்பர்வேரில் சாப்பாடு , கூடவே இன்னொரு ப்ளாஸ்டிக் கவர். மென்மையான நிறத்தில் சுடிதார், துப்பட்டா, தலையில் ஒரே ஒரு க்ளிப், கழுத்தில் தொங்கிய அட்டை அவள் பெயர் ஸ்வப்னா என்றது. ஸ்வப்னா குமாரசாமி.


இடத்தை காமித்துவிட்டு கம்ப்யூட்டர் பக்கம் திரும்பினேன். கடந்த மூன்று மாதங்களில் அந்த இடத்துக்கு வரும் நான்காவது நபர், முதலில் அங்கிருத்தவன் என் பழைய ப்ராஜெக்ட் சகா தீபாங்கர் தத்தா. அவன் வேறு வேலைக்கு சென்ற பிறகு, வந்த மற்ற இருவரும் என் வேலைக்கு சற்றும் தொடர்பில்லாதவர்கள். அவர்கள் பார்த்த வேலை என்ன என்று கூட தெரியாது.

"ப்ரின்டர் எங்கிருக்கிறது ?", "ட்ராயெர் சாவி எங்கே கிடைக்கும்?", போன்ற பொதுவியல் பேச்சுக்களை தவிர அவர்களிடம் எதுவும் பேசியதில்லை. பெரிய கம்பெனி என்றாலே இப்படித்தான் போலிருக்கு.

நான் முன்பிருந்த சிறிய நிறுவனத்தில் இப்படி இருந்ததில்லை. செக்யூரிட்டி கோதண்டம் சார் முதல் டீ கொண்டுவரும் சங்கர் வரை எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்யோன்யம் இருந்தது. வேலைக்கிடையே பூர்வ மீமாம்ஸம் முதல் பார்க்கிங் பிரச்சனை வரை காரசாரமாக பேசுவோம். இங்கு அப்படி இல்லை, ப்ராஜெக்ட் சகாக்களை தவிர மற்றையோரிடம் எதையும் அதிகமாக பேசியதில்லை.

தீபாங்கர் போனவுடனேயே அங்கு வந்தவன் ஒரே வாரத்தில் போய்விட்டான், அப்புறம் வந்தவளின் பெயர் ரஷ்மிதா. அவளைப்பற்றி சொல்வதென்றால், அவளும் இந்த ஸ்வப்னாவைபோல் க்ளிப் போட்டிருந்தாள். ஆவ்வப்போது க்ளிப்பை கழற்றி தலையை சிலுப்பி மீண்டும் க்ளிப்பை போட்டுக்கொள்வாள், தினமும் ஒரு முப்பது முறையாவது இதனை செய்வாள்.

அடிக்கடி செல்பேசுவாள். சில சமயம் குறைச்சலாக இரைச்சலின்றி, சில சமயம் நீண்ட நேரம். அப்படித்தான் ஒருநாள், அதிக நேரம் உட்கார்ந்துக்கொண்டு செல் பேசியபடி இருந்தாள். லேசாக விசும்புவது தெரிந்தது. பைக்குள் கையை விட்டு டிஷ்யூவால் கண்ணை துடைத்துக்கொண்டாள்.

சில வாரங்களுக்குப் பிறகு சென்று அவள் ஈ மெயிலில் திருமண அழைப்பிதழ் அனுப்பிக்கொண்டிருந்தாள். என்னை அழைக்கவில்லை. அதனால் என்ன. நான் பக்கத்து சீட்டுக்காரன் தானே. பக்கத்து வீட்டுக்காரனயே இப்போதெல்லாம் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பதில்லை. மாடு கன்றுபோட்டால் கூட பெயர் வைத்து ஊரோடு கொண்டாடி மகிழ்ந்த தமிழ் சமூகம்!

ஆபீஸ் வேலையாய் இரு வாரங்கள் வெளிநாடு போய்வந்தேன், பக்கத்து சீட் காலி. இப்போது இந்த ஸ்வப்னா. இவள் இந்த சீட்டிலிருந்து கிளம்பும் முன்பாவது நான் கிளம்பிவிட வேண்டும்.

"ஹாய்" என்று குரல் கேட்டது , திரும்பினால், கையில் திருப்பதி லட்டுடன் ஸ்வப்னா. "லட்டூஸ் ஃப்ரம் திருப்பதி" என்றவள். திடீரென "டூ யூ ஸ்பீக் தமிழ் ?" என்றாள்.

"ம், நானும் தமிழ்தான் ,புதுசா சேந்துருக்கீங்களா?" என்றேன்.

"டூ வீக்ஸ் ஆச்சு, ஓரியென்டேஷன்ல இருந்தேன், இனிமேல் தான் ஒர்க் ஸ்டார்ட் பண்ணணும்" என்று தமிழில் சொன்னாள்.

"இதுக்கு முன்னாடி நான் சென்னைல ஒரு சின்ன கம்பெனில இருந்தேன், ஸிக்மா டெக்னோ சொல்யூஷன்ஸ், ரொம்ப சின்ன இடம், முப்பது பேர் தான்" என்றவள், "வேலை எல்லாம் நல்லாதான் இருந்துது, இருந்தாலும் இன் எ பிக் கம்பனி வீ கேன் கெட் லாட் ஆஃப் எக்ஸ்போஷர், அண்ட் மீட் அ லாட் ஆஃப் பீப்பிள், அதனால தான் இங்க சேர்ந்தேன்" என்றாள்.

"ம்ம்ம், இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அப்றமா பேசலாம், லட்டுக்கு தாங்க்ஸ்" என்று சொல்லி கிளம்பினேன்.