Thursday, May 20, 2010

குருவி காப்போம்

சமீப காலமாக சிட்டுக்குருவிகள் காணாமல் போனதைப்பற்றி கவலைப்பட்டு நிறைய ஆதங்ககளை படிக்கவும் கேட்கவும் செய்கிறோம். குருவிகள் தவிர பல புள்ளினங்கள் நகர்புறப்பகுதிகளிலிருந்து விடைபெற்றுள்ளன.

நான் வசிக்கும் பெசன்ட் நகரில் இந்த பிரச்னை சற்று குறைவு தான். அன்றாடம் சிட்டுக்கிருவி, இரட்டைவால் குருவி, மைனா, மீன்கொத்தி இவைகளைப் பார்க்கிறேன் நகரின் ஒரு ஓரத்தில் இன்னும் மரங்கள் அடர்ந்து இருப்பதால் அதிக பாதிப்பில்லை போலிருக்கிறது.பறவைகள் இடம்பெயர்வதற்கு காரணம் வாகனப்புகையும் தானியங்கள் கிடைக்காததுமே தான்.

வீட்டுக்கு நான்கு வண்டி வைத்துக்கொள்ளும் அக்கப்போர்களை தவிர்த்து மரங்களை வளர்த்தால் குருவி காக்கலாம்.

******

மணிப்பூர் மக்களுக்கும் நாகாலாந்து மக்களுக்கும் திடீர் பிரச்னை வெடித்து மணிப்பூர் மாநிலம் முடங்கியுள்ளது. இந்தியாவில் மற்ற பகுதி மக்களுக்கு மணிப்புரிக்கும் நாகாவுக்கும் மொழியை வைத்தோ ஆளைவைத்தோ அடையாளம் சொல்லத்தெரியாது. இவ்வாறிருக்க உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது போல் சண்டையிடுவது அனாவசியம்.

கூடுவாஞ்சேரியை விட சிறிய தலைநகரங்களைக்கொண்ட பகோடா போன்ற அளவேயுள்ள சிறுமாநிலங்களை வடகிழக்கில் அமைத்ததால் வந்த வினை இது. வடகிழக்கில் இருக்கிற பிரச்னை போதாதென்று போடோலேண்ட், கேரோலேண்ட் என்று புதிய மாநில கோரிக்கைகள் வேறு.

******

இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு வங்கிகளுக்குள் நடக்கும் அக்கப்போர்களை மையமாக வைத்த புதினம் If God was a Banker. இந்த கதைக்களம் இந்தியாவிற்குப் புதிது. நல்ல விறுவிறுப்பான எழுத்து நடை. தடாலடியான வட இந்தியர் நிதானமான ஒருவர் தென் இந்தியர் ஒருவர் என்று இரண்டு வங்கி நிர்வாகிகளை முக்கிய கதைமாந்தர்களாக வைத்து புனையப்பட்டுள்ளது(?) இந்த நாவல். ஆசிரியர் ரவி சுப்ரமணியம். ஆகவே முக்கியப்பாத்திரம் யார் என்று யூகிக்க அதிக நேரம் எடுக்காது.

தனியார் , பன்னாட்டு வங்கிகளின் செயல்பாடுகளைப்பற்றி கேள்விப்பட்டது எல்லாம் இந்த நாவலால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பாத்திரங்கள் ஒரு மாதிரி ஸ்டீரியோ டைப்டாக உள்ளது . வடக்கதியர்களை எதற்கு அஞ்சாத அயோக்கிய ராஸ்கல்களாகவும் தெற்கத்தியவர்களை நேர்மை சிகாமணிகளாகவும் சித்தரித்ததை தவிர்த்திருக்கலாம்.

இருந்தாலும் சில வட இந்திய எழுத்தாணிகள் நம்மவர்களை அநியாயத்திற்கு வாறுவதைப்பார்க்கையில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை