Tuesday, September 21, 2010

கைதியின் தயக்கம் – ஆட்டக்கோட்பாடு (Game Theory)


ஒரே குற்றத்தில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளை போலிஸ் தனித்தனியே விசாரிக்கின்றது. இரண்டு கைதிகளிடமும் இந்த மூன்று தகவல்களை தருகின்றது.



1. இருவரும் குற்றத்தை ஒப்புக்கொளாமலேயே ஆளுக்கு 2 ஆண்டுகள் தண்டனை அளிக்கிககூடிய அளவுக்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன.
2. இருவரில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மற்றவரை காட்டிக்கொடுக்கும் பட்சதில், காட்டிக்கொடுக்கும் நபருக்கு ஒரு ஆண்டு தண்டனையும் மற்றவருக்கு 4 ஆண்டு தான்டனையும் கிடைக்கும்.
3. இருவருமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் பட்சத்தில் நேரடி சாட்சியங்கள் பலமாகி இருவருக்கும் 4 ஆண்டு சிறைவாசம் கிடைக்கும்.



ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தொடர்பு கொள்ள அனுமதி கிடையாது.
இந்த சூழ்நிலையில் ஒரு கைதி எப்பேர்பட்ட முடிவை எடுப்பார்?
ஒரு கைதி அமைதிகாப்பான் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் இன்னொரு கைதியால் அமைதி காக்க இயலாது.



அறிவுப்பூர்வமாக் யோசிக்கும் பொழுது அமைதி காப்பதே நல்லது என்று தோன்றினாலும் , பெரும்பாலான சமயங்களில் பரஸ்பர நம்பிக்கையின்மை காரணமாக இருவருமே பாதிக்கப்படுவது தான் நடக்கும்.



இதுவே ஆட்டக்கோட்பாட்டில் கைதியின் தயக்கம் (Prisoner’s dilemma) என்று சொல்லப்படுகிறது.



இந்த வகையான ஆட்டக்கோட்பாட்டை இந்திய சமூக சூழ்நிலையில் பொருத்தி அதன் மூலம் இந்தியாவின் மோசமான அரசுக்கட்டமைப்பு, விதிகளை மதியாமை, பின் தங்கிய சுகாதாரம், ஒழுங்குமுறையின்மை ஆகியவற்றின் காரணிகளை நிறுவ முயல்கிறார் Games Indians Play நூலின் ஆசிரியர் வி. ரகுநாதன்.



ஒரு சில சோதனைகளின் மூலம் மற்ற வளர்ந்த நாட்டு மக்களை விட இந்தியர்களுக்கு சுயக்கட்டுப்பாடும் , சமூக ப்ரக்ஞையும், குறைவு என்பதை நிரூபித்துள்ளார்.



பொதுவாகவே இந்தியச்சூழலில் வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்கள் குறைவு, அதுவும் பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில் ரொம்பவுமே குறைவு. குறிப்பாக உணர்ச்சிவசப்படாத, கொள்கையை திணிக்காத எழுத்துக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த நூல் க்ளிஷேக்களை தவிர்த்து நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு இது தான் தேவை.

Sunday, August 29, 2010

சம்பூர்ண ராமாயணம் முதல் சன் டிவி ராமாயணம் வரை

சம்பூர்ண ராமாயணம் முதல் சன் டிவி ராமாயணம் வரை வெளிவந்த்துள்ள அனைத்து புராணப்படங்களிலும் புராணத்தொடர்களிலும் ஒரு அபத்தக்காட்சி மீண்டும் மீண்டும் வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது எதிரெதிர் தரப்பு சண்டையிடும் பொழுது எய்தப்படும் அம்புகள் நேர்கோட்டில் பயணித்து ஒன்றுடன் ஒன்று இம்மி பிசகாமல் மோதும். இதுவரை வந்துள்ளை அனைத்துப்படங்களிலும் அனைத்து அம்புகளும் நேரெதிராக மோதியிருக்கின்றன. முதன் முதலில் யாரோ ஒரு எடிட்டர் செய்த ஒட்டுவேலையை இன்றுவரை கொஞசம் கூட முன்யோசனையில்லாமல் காப்பி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். யோசிங்கப்பா.

ஒருமுறை பீட்சா ஹட்டில் சாப்பிட்ட கார்லிக் பிரெட்டின் சுவை என் நண்பர் மற்றும் முன்னாள் பாஸ் ரங்காவிற்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. என்னிடம் சொன்னார். நான் “அது ரொம்ப சிம்பிள் பாஸ், வீட்டிலேயே செஞ்சிடலாம், சாதா ப்ரிடட்டில் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்டை தடவி, நெய்யில் டோஸ்ட் செஞ்சிடுங்க. போதும்” என்றேன். அடுத்த திங்கட்கிழமை என்னிடம் வந்து “ஒங்க ரெசிபி சூப்பர் தல” என்றார். “அப்படியா பாஸ், நான் குன்சாக அடிச்சி விட்டேன் அதுதான் கார்லிக் பிரெட் ரெசிபியா?” என்று கேட்டேன்.

விப்ரோ ஆக்சென்ச்சர் என்று இரு மலைகளிக்கிடயே குறிச்சியாக புதிய அலுவலகம். நல்ல வசதியாக இருந்த்தாலும் ஒரு சங்கடம். ஆபிஸின் பின் வாசலில் ஒரு டீ+ஸ்னாக்ஸ் கடை, மேற்சொன்ன இரு கம்பெனி தம்மர்களும் சதா சர்வ காலமும் எங்கள் ஏரியாவிற்கு அருகே வந்து ஊதித்தள்ளுகிறார்கள். அந்தப்பக்கம் போனாலே புகை மண்டலத்தில் ஊட்டி/சொர்கத்தில் இருப்பது போல ஒரு ஃபீலிங். பாவம் கடைக்காரர். Bloody smokers.

Thursday, May 20, 2010

குருவி காப்போம்

சமீப காலமாக சிட்டுக்குருவிகள் காணாமல் போனதைப்பற்றி கவலைப்பட்டு நிறைய ஆதங்ககளை படிக்கவும் கேட்கவும் செய்கிறோம். குருவிகள் தவிர பல புள்ளினங்கள் நகர்புறப்பகுதிகளிலிருந்து விடைபெற்றுள்ளன.

நான் வசிக்கும் பெசன்ட் நகரில் இந்த பிரச்னை சற்று குறைவு தான். அன்றாடம் சிட்டுக்கிருவி, இரட்டைவால் குருவி, மைனா, மீன்கொத்தி இவைகளைப் பார்க்கிறேன் நகரின் ஒரு ஓரத்தில் இன்னும் மரங்கள் அடர்ந்து இருப்பதால் அதிக பாதிப்பில்லை போலிருக்கிறது.பறவைகள் இடம்பெயர்வதற்கு காரணம் வாகனப்புகையும் தானியங்கள் கிடைக்காததுமே தான்.

வீட்டுக்கு நான்கு வண்டி வைத்துக்கொள்ளும் அக்கப்போர்களை தவிர்த்து மரங்களை வளர்த்தால் குருவி காக்கலாம்.

******

மணிப்பூர் மக்களுக்கும் நாகாலாந்து மக்களுக்கும் திடீர் பிரச்னை வெடித்து மணிப்பூர் மாநிலம் முடங்கியுள்ளது. இந்தியாவில் மற்ற பகுதி மக்களுக்கு மணிப்புரிக்கும் நாகாவுக்கும் மொழியை வைத்தோ ஆளைவைத்தோ அடையாளம் சொல்லத்தெரியாது. இவ்வாறிருக்க உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது போல் சண்டையிடுவது அனாவசியம்.

கூடுவாஞ்சேரியை விட சிறிய தலைநகரங்களைக்கொண்ட பகோடா போன்ற அளவேயுள்ள சிறுமாநிலங்களை வடகிழக்கில் அமைத்ததால் வந்த வினை இது. வடகிழக்கில் இருக்கிற பிரச்னை போதாதென்று போடோலேண்ட், கேரோலேண்ட் என்று புதிய மாநில கோரிக்கைகள் வேறு.

******

இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு வங்கிகளுக்குள் நடக்கும் அக்கப்போர்களை மையமாக வைத்த புதினம் If God was a Banker. இந்த கதைக்களம் இந்தியாவிற்குப் புதிது. நல்ல விறுவிறுப்பான எழுத்து நடை. தடாலடியான வட இந்தியர் நிதானமான ஒருவர் தென் இந்தியர் ஒருவர் என்று இரண்டு வங்கி நிர்வாகிகளை முக்கிய கதைமாந்தர்களாக வைத்து புனையப்பட்டுள்ளது(?) இந்த நாவல். ஆசிரியர் ரவி சுப்ரமணியம். ஆகவே முக்கியப்பாத்திரம் யார் என்று யூகிக்க அதிக நேரம் எடுக்காது.

தனியார் , பன்னாட்டு வங்கிகளின் செயல்பாடுகளைப்பற்றி கேள்விப்பட்டது எல்லாம் இந்த நாவலால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பாத்திரங்கள் ஒரு மாதிரி ஸ்டீரியோ டைப்டாக உள்ளது . வடக்கதியர்களை எதற்கு அஞ்சாத அயோக்கிய ராஸ்கல்களாகவும் தெற்கத்தியவர்களை நேர்மை சிகாமணிகளாகவும் சித்தரித்ததை தவிர்த்திருக்கலாம்.

இருந்தாலும் சில வட இந்திய எழுத்தாணிகள் நம்மவர்களை அநியாயத்திற்கு வாறுவதைப்பார்க்கையில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை


Thursday, April 15, 2010

TV துளிகள்


SS Music இல் கடும் காம்பியர் பஞ்சம். கிட்டத்தட்ட எல்லா நிகழ்சிகளிலும் பலோமா ஒண்டி ஆளாக ஊடு கட்டுகிறார். அவ்வபோது பூஜா தலைகாட்டுகிறார். பலோமா கேமரா கோணத்தை கூட மாறாமல் விதவிதமாக உடை(!)களை மட்டும் மாற்றி நிகழ்சிகளை வழங்குகிறார். கேமராமேன் கூட படப்பிடிப்பு ஆரம்பித்ததும் கேமராவை நிலைபெறச்செய்து விட்டு "பாப்பா நீயே ஷோ முடிஞ்சதும்கேமராவை ஆஃப் பண்ணிடு" என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவார் போலிருக்கிறது.



-----

NDTV HINDU வில் கேமரா பஞ்சம். ஸ்டுடியோவில் யாரையாவது வைத்து பேட்டி எடுக்கும் போது கேமரா உரையாடும் இருவரில் ஒருவரை மட்டுமே காட்டுகிறது. சேனல் மாற்றி வரும் போது என்ன மேட்டர் என்று தெரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.

----

NDTV HINDU தமிழ் செய்திகளில் காரம் அதிகம். தெகிரியமாக மாநில அரசை தாக்குகிறர்கள். எவ்வளவு தூரம் போகிறது என்று பார்க்கலாம்.

---

IPL ல்விளம்பர வெறி ரொம்பவே ஜாஸ்தியாக உள்ளது. சிக்ஸ் அடித்தால் DLF மேக்ஸிமம் என்றும், கார்பன் கமால் கேச் என்று ஒவ்வொரு பததிற்குள்ளும் ஒரு விளம்பர இடைச்செருகலை செய்கிறர்கள். ஸ்ஸப்பஆஆ

----

காமெடி நிகழ்சிகளை விட சசிதரூர் லலித்மோடி யுத்தம் தமாஷாக இருக்கிறது. எவ்வளவு டீப்பா போறங்க, விட்டா நாலஞ்சு தலைமுறையை தோண்டி எடுப்பாங்க போலருக்கு. என்னைப் பொருத்தவரையில் லலித்மொடியை வெளியுறவு அமைச்சராக போடலாம். சசிதரூர் போன்ற போலி லிபரல் அரைக்கிறுக்கர்களை விட லலித் மோடி போன்ற தடாலடிப் பேர்வழிகள் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர்கள்.

Wednesday, March 03, 2010

கதம்பம்


கீழே கருங்கல் தளம்.

மேலே கருங்கற்கள் பலகைகளாக வைக்கப்பட்ட கூரை.

கூரையை தாங்கிப்பிடிக்க கருங்கல் தூண்.

குறுக்குவாகாக கருங்கல் தூலம்

தூணில் செதுக்கப்பட்ட யாளி

யாளியின் அடியில் துதிக்கை கொண்டு ஏசலாடும் யானை.

யாளி மீது பாகன்.

பாகன் கையில் அங்குசம்.

அங்குசம் கண்டு மிரளும் யாழியின் கண்கள்

இவ்வளவும் தேவை ஒரு டியூப் லைட் மாட்ட

*********

ரின் -டைட் விளம்பர யுத்தம் காண சகிக்கவில்லை. இந்த FMCG நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கொடுக்கும் பில்ட் அப் இருக்கிறதே அடேயப்பா.

சர்வ சாதாரணமான சமாச்சாரங்களான சலவை சோப், பவுடர் இவர்கள் நொபல் விஞ்ஞானிகளை கொண்டு தயாரித்தது போன்ற பிம்பத்த நிறுவ முயன்றாலும் அது பல சமயங்களில் படுதோல்வியில் முடிகிறது.

குறிப்பாக பற்பசை மற்றும் டூத் பிரஷ் போன்றவைகளை என்னவோ ராக்கெட் தொழில் நுட்பம் கொண்டு தயாரித்தது போல் காண்பிப்பார்கள்.

*********

பண்டைய தத்துவங்களையும் நவீன சிந்தனைகளையும் கலந்து பேல்பூரியாகத்தரும் நியூ ஏஜ் சாமியார்களைக்கண்டால் எனக்கு அறவே ஆகாது. செஷனுக்கு இவ்வளவு என்று மீட்டர் போட்டு அமவுண்டு கறக்கும் யாரையும் தத்துவ ஞானியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பேர்பட்டவர்களின் பின்னால் சமூகத்தில் நல்ல ஸ்திதியில் உள்ள பலர் அணிவகுப்பது ஆச்சர்யம்.

இடது கன்னத்திற்கு ஒருவர், வலது கன்னத்திற்கு ஒருவர் என்று ஷேவிங் செய்வத்தில் கூட ஸ்பெஷலிஸ்டுகள் வந்துவிட்ட காலமிது. ஆனால் மேற்படி நியு ஏஜ் குருமார்கள் யோக கற்பிப்பது, பத்திரிக்கைக்கு பத்தி எழுதுவது, CEO க்களுக்கு அட்வைஸ் செய்வது , உலக அமைதியை ஏற்படுத்துவது , ஆஸ்பத்திரி நடத்துவது என்று சகலத்தையும் செய்கிறார்கள். பலர் சிலகாலம் ஆட்டத்தில் இருந்து கல்லா கட்டியவுடன் ஃபீல்ட் அவுட் ஆகிறார்கள். ஆட்டத்தில் தொடருபவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

Saturday, January 23, 2010

IPL பவுன்சர்

ஐபிஎல் ஏலம் பாகிஸ்தானில் ஏகப்பட்ட பீலிங்ஸை கிளப்பி விட்டிருக்கிறது. அந்த நாட்டில் பலரும் நம்மூரில் சில பேரும் செம கடுப்பில் இருக்கிறார்கள். வியாபாரத்தையும் தேச பக்தியையும் நம்மாட்களும் பாகிஸ்தானியர்களும் போட்டு குழப்பி வருகிறர்கள்.
இதேபோல டாடா ஜாகுவாரை வங்கினாலும் மிட்டல் ஆர்செலரை வாங்கினாலும் தேவயற்ற தேசபக்தி டேகை ஒட்டிவிடுகிறர்கள்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பல கருத்துக்கள் பேத்தலாக உள்ளது.

1. யாரும் ஏலம் எடுக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தால் ஏலம் விடாமலேயே இருந்திருக்கலாம். என்று ஒரு வாதம். அப்படி செய்திருந்தால் என்னவாகீருக்கும். இப்போது புலம்புபவர்கள்
'ஐயையோ! ஏலத்தில் பாக் விரர்களை சேர்க்கவில்லயே, நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பை தடுக்கிறார்களே' என்று வேறு விதமான ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

2. என்ன இருந்தாலும் உலக சாம்பியன், யாரையும் ஏலம் எடுக்காதது தப்பு.
இன்றைய கால்பந்து (காற்பந்து ?) உலக சாம்பியன் இத்தாலி, எத்தனை இத்தாலிய வீரர்கள் இப்போது EPLல் விளையாடுகிறர்கள்?

இறுதியாக பாகிஸ்தான் வீரர்களை நெதட்லாந்து, கானடா நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு கானடா மற்றும் நெதர்லாந்திற்கு களங்கம் ஏற்ப்படுத்தும் லலித் மோடியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்வதற்கு மேலும் சில கருத்துக்கள்(!) இருந்தாலும் சனிக்கிழமை அன்று இவ்வளவு சுறுசுறுப்பு கூடாது என்பதால் அப்பீட்டாகிறேன்.

Wednesday, January 06, 2010

சென்று கொடு வென்று விடு

சென்ற வருடம் பதிவு எதுவும் எழுதாமல் சாவியானேன், இந்த வருடமாவது இயன்ற வரை எழுத வேண்டும்.


கடந்த வார இறுதியில் கைய்யில் தட்டுபட்ட ஒரு நூலை படிக்கத்துவஙினேன். அதில் வரும் சில அரிய கருத்துக்கள்.



*எந்த வேலையை செய்தாலும் பலனை எதிர்பாராமல் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும்.
*நம் செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
*நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம்.

மேற்படி கர்ம யோக மேட்டர்களை பொதுவாக நாம் கீதைபேருரைகளில் படித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம்.
கர்ம யோகத்தைப் பற்றியும், நிஷ்காம கர்மத்தையும் அலுவலக் சூழலில் பொருத்தி புனையப்பட்ட ஒரு நிர்வாகவியல் கதை "GO GIVER" புத்தகம்.

பொதுவாக மேலாண்மை நூல்களையும் சுய முன்னேற்ற நூல்களையும் நான் படிப்பதில்லை.

வேண்டா வெறுப்பாக இந்த நூலைப்படிக்க துவங்கினேன். ஒவ்வொரு அத்தியாயமும் கீதை தத்துவங்களையே சொல்வதால் பின்குறிப்பில் ஏதாவது இருக்குமா என்று பார்த்தேன். ம்ஹும்ம்.

எப்படியோ மீண்டும் கீதையை புரட்ட வைத்த நூலாசிரியர்களுக்கு நன்றி.