Friday, August 24, 2007

ராஜதந்திரி ரோனன் சென்

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்கட்சிகளும் இடதுசாரிகளும் தீவிரமாக எதிர்த்துக்கொண்டிருக்கும் போது, இதனை எதிர்பவர்களெல்லாம் "தலை இல்லாத முண்டம்" என்கிற ரீதியில் இந்திய தூதர் ரோனென் சென் கருத்து கூறியுள்ளார்.


பிஜேபி, சிபிஎம் என்று ஆளாளுக்கு அவரை பிடித்து எகிற ஆரம்பித்துளார்கள். இது எனக்கு நல்ல ராஜதந்திரமாகவே படுகிறது. இரண்டு வருடங்கள் பேசிப்பேசி போட்ட ஒப்பந்ததை குப்பையில் கடாச வேண்டும் என்ற இந்தக்கட்சிகளின் கோரிக்கை, இப்போது ரோனன் சென்னின் சீட்டைக்கிழிக்க வேண்டும் என்கிற அளவுக்கு இறங்கி வந்துள்ளது.

விவாத்ததை ஒரு உப்பு பெறாத விஷயத்தின் பக்கம் திருப்பிய ரோனென் சென் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை நல்ல ராஜதந்திரிகள் தான்.

Friday, June 08, 2007

பக்கத்து சீட்

"வேர் இஸ் டெஸ்க் நம்பர் 22?" என்று கேட்டபடி என் சீட்டுக்கருகில் வந்தாள் அவள், ஐடி பெண்ணுக்கே உரிய ஸ்வரூபத்தில், கையில் செல்ஃபோன், அதே கையில் சிறிய கைக்குட்டை, தோளில் டிசைனர் ஹேன்ட்பேக் , இன்னொரு கையில் டப்பர்வேரில் சாப்பாடு , கூடவே இன்னொரு ப்ளாஸ்டிக் கவர். மென்மையான நிறத்தில் சுடிதார், துப்பட்டா, தலையில் ஒரே ஒரு க்ளிப், கழுத்தில் தொங்கிய அட்டை அவள் பெயர் ஸ்வப்னா என்றது. ஸ்வப்னா குமாரசாமி.


இடத்தை காமித்துவிட்டு கம்ப்யூட்டர் பக்கம் திரும்பினேன். கடந்த மூன்று மாதங்களில் அந்த இடத்துக்கு வரும் நான்காவது நபர், முதலில் அங்கிருத்தவன் என் பழைய ப்ராஜெக்ட் சகா தீபாங்கர் தத்தா. அவன் வேறு வேலைக்கு சென்ற பிறகு, வந்த மற்ற இருவரும் என் வேலைக்கு சற்றும் தொடர்பில்லாதவர்கள். அவர்கள் பார்த்த வேலை என்ன என்று கூட தெரியாது.

"ப்ரின்டர் எங்கிருக்கிறது ?", "ட்ராயெர் சாவி எங்கே கிடைக்கும்?", போன்ற பொதுவியல் பேச்சுக்களை தவிர அவர்களிடம் எதுவும் பேசியதில்லை. பெரிய கம்பெனி என்றாலே இப்படித்தான் போலிருக்கு.

நான் முன்பிருந்த சிறிய நிறுவனத்தில் இப்படி இருந்ததில்லை. செக்யூரிட்டி கோதண்டம் சார் முதல் டீ கொண்டுவரும் சங்கர் வரை எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்யோன்யம் இருந்தது. வேலைக்கிடையே பூர்வ மீமாம்ஸம் முதல் பார்க்கிங் பிரச்சனை வரை காரசாரமாக பேசுவோம். இங்கு அப்படி இல்லை, ப்ராஜெக்ட் சகாக்களை தவிர மற்றையோரிடம் எதையும் அதிகமாக பேசியதில்லை.

தீபாங்கர் போனவுடனேயே அங்கு வந்தவன் ஒரே வாரத்தில் போய்விட்டான், அப்புறம் வந்தவளின் பெயர் ரஷ்மிதா. அவளைப்பற்றி சொல்வதென்றால், அவளும் இந்த ஸ்வப்னாவைபோல் க்ளிப் போட்டிருந்தாள். ஆவ்வப்போது க்ளிப்பை கழற்றி தலையை சிலுப்பி மீண்டும் க்ளிப்பை போட்டுக்கொள்வாள், தினமும் ஒரு முப்பது முறையாவது இதனை செய்வாள்.

அடிக்கடி செல்பேசுவாள். சில சமயம் குறைச்சலாக இரைச்சலின்றி, சில சமயம் நீண்ட நேரம். அப்படித்தான் ஒருநாள், அதிக நேரம் உட்கார்ந்துக்கொண்டு செல் பேசியபடி இருந்தாள். லேசாக விசும்புவது தெரிந்தது. பைக்குள் கையை விட்டு டிஷ்யூவால் கண்ணை துடைத்துக்கொண்டாள்.

சில வாரங்களுக்குப் பிறகு சென்று அவள் ஈ மெயிலில் திருமண அழைப்பிதழ் அனுப்பிக்கொண்டிருந்தாள். என்னை அழைக்கவில்லை. அதனால் என்ன. நான் பக்கத்து சீட்டுக்காரன் தானே. பக்கத்து வீட்டுக்காரனயே இப்போதெல்லாம் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பதில்லை. மாடு கன்றுபோட்டால் கூட பெயர் வைத்து ஊரோடு கொண்டாடி மகிழ்ந்த தமிழ் சமூகம்!

ஆபீஸ் வேலையாய் இரு வாரங்கள் வெளிநாடு போய்வந்தேன், பக்கத்து சீட் காலி. இப்போது இந்த ஸ்வப்னா. இவள் இந்த சீட்டிலிருந்து கிளம்பும் முன்பாவது நான் கிளம்பிவிட வேண்டும்.

"ஹாய்" என்று குரல் கேட்டது , திரும்பினால், கையில் திருப்பதி லட்டுடன் ஸ்வப்னா. "லட்டூஸ் ஃப்ரம் திருப்பதி" என்றவள். திடீரென "டூ யூ ஸ்பீக் தமிழ் ?" என்றாள்.

"ம், நானும் தமிழ்தான் ,புதுசா சேந்துருக்கீங்களா?" என்றேன்.

"டூ வீக்ஸ் ஆச்சு, ஓரியென்டேஷன்ல இருந்தேன், இனிமேல் தான் ஒர்க் ஸ்டார்ட் பண்ணணும்" என்று தமிழில் சொன்னாள்.

"இதுக்கு முன்னாடி நான் சென்னைல ஒரு சின்ன கம்பெனில இருந்தேன், ஸிக்மா டெக்னோ சொல்யூஷன்ஸ், ரொம்ப சின்ன இடம், முப்பது பேர் தான்" என்றவள், "வேலை எல்லாம் நல்லாதான் இருந்துது, இருந்தாலும் இன் எ பிக் கம்பனி வீ கேன் கெட் லாட் ஆஃப் எக்ஸ்போஷர், அண்ட் மீட் அ லாட் ஆஃப் பீப்பிள், அதனால தான் இங்க சேர்ந்தேன்" என்றாள்.

"ம்ம்ம், இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அப்றமா பேசலாம், லட்டுக்கு தாங்க்ஸ்" என்று சொல்லி கிளம்பினேன்.

Thursday, May 24, 2007

விஜயகாந்தின் காமெடி

'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று இன்னும் முடிவு செய்யவில்லை' என்று விஜயகந்த் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் அவரிடம் இருப்பது ஒரே ஒரு ஓட்டு அதனை யாருக்கு போட்டால் என்ன , இல்லை போடாவிட்டால் தான் என்ன! ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுபவர்கள் வரிசையில் நின்று இவர்டம் ஆதரவு கேட்பது போலவும் , இவர் யோசித்து சொல்கிறேன் என்பது போலவும் பில்டப் கொடுப்பது , டூ மச்.


சினிமாவில் தனியொரு ஆளாக காஷ்மீர் வரை சென்று, பஞ்ச் டயலாக் பேசியபடியே பயங்கரவாதிகளை பந்தாடுவது மாதிரி ஜனாதிபதி தேர்தலையும் நினைத்துவிட்டார் போல.

ஒரு கதை நியாபகம் வருகிறது. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டார்களாம்..

பிச்சை 1 : இந்த வருஷம் எப்படியாவது திருமலை நாயக்கர் மஹாலை வாங்கிடுவேன்.

பிச்சை 2 : உன்னால் முடியாது, நான் விற்பதாக இல்லை.

"ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? " என்கிற அபத்த கேள்வியை பேட்டியில் விஜயகாந்திடம் கேட்ட நிருபரை கண்டு காலில் விழுந்து வணங்க வேண்டும்.

Tuesday, April 03, 2007

இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் என்ன வித்தியாசம்?

சின்ன வயசுல எனக்கு இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் வித்தியாசம் என்னன்னு தெரியாது, அப்பறம் ஓரளவு ஞானம் வந்ததும் புரிய ஆரம்பிச்சுது. ஆனா பாருங்க என்னுடைய புரிதல் தப்புன்னு இப்பதான் தெரிஞ்சுது. இந்த படத்த பாருங்க.







இவரோட பேரு டேவிட் கேமரூன், ப்ரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி தலைவர், இவ்வளவு நாள் வலதுசாரியா இருந்த கட்சிய திடீர்னு இடதுசாரியா மாத்திட்டாரு, எப்படின்னு கேக்கறீங்களா, இந்த போட்டோவையும் பாருங்க.





Tuesday, February 27, 2007

டிஜிட்டல் கேமராவும் டூரிஸ்டுகளும்

டிஸ்கி 1- இந்த பதிவு படமெடுப்பத்தை நல்ல பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்களையோ, அல்லது படமெடுப்பதில் ஆத்ம த்ருப்தி அடைபவர்களையோ கருத்திற்கொண்டு இடப்பட்டதல்ல.

டிஸ்கி 2- தலைப்பு தமிழில் இல்லாததால் இந்த பதிவிற்கு வரிவிலக்கு கிடையாது


குழுவாக சுற்றுலாசெல்லும் போது கண்ணால் காண்பதையெல்லாம் கேமெராவில் சுடும் அன்பர்களே,

நீங்கள் வைத்திருப்பதோ டிஜிட்டல் கேமரா, படம் எடுப்பதோ கட்டடத்தை, யாராவது ஒருவர் படமெடுத்தால் போதுமே ! பிறகு படங்களை மின்மடல் மூலமாகவோ ஃபோட்டோ ஷேரிங் மூலமாகவோ பரிமாறிக்கொள்ளலாமே!

அவ்வளவு ஏன், வரலாற்று முக்கியத்துவம் அல்லது முக்கிய சுற்றுலாத்தலங்களின் படங்கள் ஏற்கனவே அனேக முறை படமேடுத்தாயிற்று, பல படங்கள் இணையத்தில் இருக்கும், ஓசியில் கிடைக்கும், கூகிளாண்டவரின் அருளுடன் அவற்றைப்பெறலாம்.

ஆகவே கட்டங்களையோ மரம் செடி கொடிகளையோ படம் எடுப்பது வேஸ்ட்!

அதனினும் வேஸ்ட் பலபேர் டிஜிட்டல் கேமராவில் அவற்றை படமெடுப்பது.

படமெடுப்பது வேஸ்டெனில் கேமரா எதற்கு? நம் கையில் கேமரா இருப்பது மனிதர்களை படமெடுக்கவே, உடன் வரும் நண்பர்களையும் அன்பர்களையும் படமெடுத்தாலே போதும் என்பது இந்தச்சிறியோனின் அபிப்பிராயம்

நம்மை நிறைய படமெடுத்துக்கொள்வதிலும் ஏகப்பட்ட தர்மசங்கடங்கள் உண்டு, குறிப்பாக மென்படங்களை எவ்வளவு பிரதிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் எனபதாலும் , அதனை வைத்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்யலாம் என்பதாலும் சற்று கவனம் தேவை.

பொதுவாக எனக்கு அவ்வளவாக் படமெடுத்துக்கொள்வது பிடிக்காது, அதனாலேயே இந்திவிற்க்கு வெளியே பல இடங்களிலும் இந்தியாவில் சில இடங்களிலும் நிலவும் CCTV பொருத்தும் போக்கை வெறுக்கிறேன், CCTV கேமராக்களை கண்ட இடங்களில் பொருத்துவதை எதிர்த்து போராட வேண்டும்.

பாதுகாப்புக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் , அவை ஏற்ப்புடையவை என்றாலும் சீக்கிரமே இதற்கு மாற்று கண்டுபிடிப்பது நலம். குறைந்தபட்சம் CCTV பொருத்துவதற்கான வரன்முறைகள், எவ்வளவு நாட்கள் படங்களை வைத்திருக்கலாம், படங்களின் சேமிப்பிற்க்கு தேவையான பாதுகாப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும். இதனை அரசாங்கம் செய்யாமல் IEEE, ISO போன்ற தொழில்முறை குழுக்கள் வரையறுக்கலாம்.