Friday, October 03, 2008

வண்டி எண் 103

"வண்டி எண் 103 தாம்பரம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லும் துரித பாசஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது நடைமேடைக்கு வந்து செல்லும்" என்று கரகரத்த குரலில் வரும் அறிவிப்பைக்கேட்டு வேகமாக நடைமேடை நான்கை நோக்கிச்சென்றால். அங்கு நிதானமாக வரும் WDM 3d ERODE முன்னால் இழுத்துவர பின்னால் 9 பெட்டிகள் கொண்ட வண்டி தெரியும்.

வண்டியில் ஏறி இடம் பிடித்து உட்காருவது பெரும்பாலும் பிரச்சனை இல்லை, முகூர்த்த நாட்கள் ,மேல்மருவத்தூர் திருவிழா போன்ற சமயங்களில் மட்டும் கூட்டம் கொஞ்சம் இருக்கும்.

மகேந்திரா சிட்டி ஐ.டி மக்கள், மறைமலை நகர் தொழிலாளர்கள், SRM மாணவர்கள், வங்கி ஊழியர்கள், சென்னையில் குடித்தனம் இருந்து வெளியூர் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் என்று வண்டி முழுவதும் சீசன் டிக்கட் கூட்டம் தான் இருக்கும்.

அவ்வப்போது செவ்வாடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்களும் வருவார்கள்.

காலை 6 30 க்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு 10:50க்கு புதுவை செல்லும். காலை வேளைகளில் கில்லி மாதிரி டைமுக்கு வந்துவிடும் ஆனால் மாலையில் மெகா சொதப்பலாக வரும் அபகீர்த்தி இந்த வண்டிக்கு உண்டு.

வேகமென்றால் வேகம் அப்படி ஒரு வேகம். கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு சுமார் 11 நிமிடத்தில் சென்றுவிடும். குளிர் காலங்களில் மூடுபனியைக் கிழித்துக்கொண்டு செல்லும் அழகை இந்தப்படத்தைப் பார்த்தாலே தெரியும்.




மற்ற வண்டிகளைப்போல அதிகம் வியாபாரிகளைக் காண முடியாது, ஒரே ஒரு சுண்டல்காரர் மட்டும் விடாமல் வருகிறார்.

ரெயில்வே நிர்வாகம் இந்த வண்டியை இயக்கும் விதமே அலாதியனது. இன்னதுதான் என்றில்லாமல் பல வித என்ஞின்களை பொருத்துவார்கள். ஆரம்பத்தில் ஈரோடு WDM3d, பிறகு டிசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்ட பிறகு WAP-4 Arakkonam எஞ்ஜினும் போட்டார்கள் , பிறகு என்ன ஆனதோ, பலவிதமான எலெக்ட்ரிக் எஞ்ஜின்களை பொருத்துகிறார்கள், WAG7 போன்றவை, ஒரு முறை துக்ளகாபாத் எஞ்ஜினைக்கூட பொருத்தினார்கள். இது போதாதென்று ICFல் ரிப்பேர் செய்யப்படும் ரெயில் பெட்டிகளை இந்த வண்டியில் இணைத்து சோதனை ஓட்டம் விடுவார்கள்.

பல நாட்கள் இந்த ரெயிலில் பயணம் செய்திருக்கிறேன், இப்போது புதிய வேலையில் சேர்ந்திருப்பதால் 103 ல் போகவேண்டிய தேவை இல்லை. I miss it.

Monday, September 01, 2008

மின் காந்த அடுப்பு (Induction Stove)


சமீப காலங்களாக , வட்டார பத்திரிக்கைகள்,மின்சார ரயிலிலும் , மாநகர பேருந்துகளிலும் ஒட்டப்படும் விளாம்பரஙள் ஆகியவற்றில் வியாபித்திருப்பது மின்காந்த அடுப்புதான் (Induction Stove).


AC மின்சாரத்தின் நடுவே காந்த உணர்ச்சிக்கு உள்ளாகும் இரும்பு போன்ற உலோகங்களை வைப்பதால் உருவாகும் எட்டி கரண்ட் மூலம் உணவுப்பண்டங்களை சூடாக்குகிறது.
இந்த அடுப்பில் இரும்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை (Ferro or ferri magnetic)மட்டுமே வைத்து சமைக்க இயலும்.

குறைந்த அளவு மின்சார செலவில் (ஒரு மணிநேரத்திற்கு முக்கால் யூனிட்) சமையல் செய்யலாம். மின்குக்கர், மைக்ரோவேவ் போன்று மூடிய நிலையில் இல்லாமல் , திறந்த அடுப்பு என்பதால் நம்மூர் சமையலுக்கு மிகவும் ஏற்றது.

1700 முதல் 3500 ரூபாய் வரை பல வித வடிவங்களில் கிடைக்கிறது.
ஆரம்பத்தில் சில கடைகளிலிலும், பொருட்காட்சிகளிலும் மட்டுமே காணப்பட்டாலும் இன்று பெரும்பாலான பாத்திரக்கடைகளில் கிடைக்கிறது.

இவ்வளவு நல்லவிஷயங்கள் இருந்தாலும் இன்னும் விடியோகான், எல் ஜி, போன்ற பெரிய பிராண்டுகள் இதன் உற்பத்தியை துவக்கவில்லை. பெரும்பாலும் உப்புமா பிராண்டுகளே உள்ளன. எப்படி நம்பி வாங்குவது? இந்த அடுப்புக்களை விற்கும் ஒரு பிரதிநிதியை கேட்டபொழுது "மாசத்துக்கு 70 பீஸ் போவுது சார்" என்றார்.

கேஸ் தொல்லை பெரும் தொல்லையாக இருப்பதால் கண்டிப்பாக ஒன்று வாங்கியாக வேண்டும்.

Monday, August 11, 2008

ரஷ்யா ஜார்ஜியா போர்- இந்திய அரசு அதிரடி முடிவு!!

கடந்த சில நாட்களாக ரஷ்யா ஜார்ஜியா நாடுகளுக்கிடையே தென் ஓஷேஷிய பகுதி தொடர்பாக போர் நடப்பது தெரியும்.

நானும் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டேன், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுரவுத்துறை எந்த கருத்தையுமே சொல்லவில்லையே ஏன்?

சில வருடங்களுக்கு முன்பு உலகத்தில் நடக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் பஞ்ச் டயலாக் சொல்லும் க.கந்தசாமியாக விளங்கிய இந்திய வெளியுரவுத்துறை இப்போதெல்லாம் மவுனம் சாதிக்கிறது, இல்லையென்றால் 'பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்' என்பது போன்ற வழவழா கருத்தை சொல்லுகிறது.

நம்மால் ஒன்று கையால் ஆகாது பிறகு வாய்ச்சவடால் மட்டும் எதற்கு என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார்களோ? உண்மை அதுவெனில் மிக்க மகிழ்ச்சி.

'நம்ம வழியை நாம பாத்துப்போம் , நமக்கு என் ஊர் நாட்டமை' என்று நினைத்தால் நாட்டிற்கு நல்லது.

Friday, July 11, 2008

கேரளாவில் தமிழக தொழிலாளர்களுக்கு அடி உதை!

கொல்லம் புனலூர் அகல ரெயில் திட்டப்பணிகளை செய்துகொண்டிருந்த தமிழக மற்றும் ஆந்திர தொழிலாளர்கள் அடித்து உதைக்கப்பட்டனர்.

உள்ளூர் காரர்களை வேலைக்கு அமர்த்தாததால் ஒப்பந்தக்காரர்கள் மீது கோபம் கொண்டு தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடந்துள்ளது. சில பல தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தை.

சில கேள்விகள்
************************
1. இடதுசாரிகள் செய்தால் 'ராஜ் தாக்கரேத்தனம்' சரியா?
2. உலகெல்லாம் உழைத்துப்பிழைக்கும் மலையாளிகள் இவ்வாறு செய்வது என்ன நியாயம்?

Tuesday, July 08, 2008

தேவே கவுடாவும் அணுசக்தி ஒப்பந்தமும்.

சரியாக 10 மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துக் குடுத்த கடும் கண்டனம்.

Expressing disapproval of the Indo-U.S. nuclear deal, the former Prime Minister H.D. Deve Gowda on Tuesday said that if it is operationalised, India would become “a puppet in the hands of America.”


இன்று அதே தேவகவுடா அடித்த அந்தர் பல்டி.

After SP, JD(S) offers Cong support on N-Deal


எனக்கு ஒரு டவுட்
-----------------------------
இடதுசாரிகளின் ஆதரவு என்னும் சங்கடத்தை எதிர்கொள்ளவே இவ்வளவு பாடுபட்ட காங்கிரஸ், முலயாம், அஜித்சிங்க் , தேவே கவுடா போன்ற ஆசாமிகளை எப்படிச் சமாளிக்கப்போகிறது?


என் ஆசை
---------------
அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற வேண்டும். ஆனால் ஆட்சி கவிழ வேண்டும்.