Wednesday, March 03, 2010

கதம்பம்


கீழே கருங்கல் தளம்.

மேலே கருங்கற்கள் பலகைகளாக வைக்கப்பட்ட கூரை.

கூரையை தாங்கிப்பிடிக்க கருங்கல் தூண்.

குறுக்குவாகாக கருங்கல் தூலம்

தூணில் செதுக்கப்பட்ட யாளி

யாளியின் அடியில் துதிக்கை கொண்டு ஏசலாடும் யானை.

யாளி மீது பாகன்.

பாகன் கையில் அங்குசம்.

அங்குசம் கண்டு மிரளும் யாழியின் கண்கள்

இவ்வளவும் தேவை ஒரு டியூப் லைட் மாட்ட

*********

ரின் -டைட் விளம்பர யுத்தம் காண சகிக்கவில்லை. இந்த FMCG நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கொடுக்கும் பில்ட் அப் இருக்கிறதே அடேயப்பா.

சர்வ சாதாரணமான சமாச்சாரங்களான சலவை சோப், பவுடர் இவர்கள் நொபல் விஞ்ஞானிகளை கொண்டு தயாரித்தது போன்ற பிம்பத்த நிறுவ முயன்றாலும் அது பல சமயங்களில் படுதோல்வியில் முடிகிறது.

குறிப்பாக பற்பசை மற்றும் டூத் பிரஷ் போன்றவைகளை என்னவோ ராக்கெட் தொழில் நுட்பம் கொண்டு தயாரித்தது போல் காண்பிப்பார்கள்.

*********

பண்டைய தத்துவங்களையும் நவீன சிந்தனைகளையும் கலந்து பேல்பூரியாகத்தரும் நியூ ஏஜ் சாமியார்களைக்கண்டால் எனக்கு அறவே ஆகாது. செஷனுக்கு இவ்வளவு என்று மீட்டர் போட்டு அமவுண்டு கறக்கும் யாரையும் தத்துவ ஞானியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பேர்பட்டவர்களின் பின்னால் சமூகத்தில் நல்ல ஸ்திதியில் உள்ள பலர் அணிவகுப்பது ஆச்சர்யம்.

இடது கன்னத்திற்கு ஒருவர், வலது கன்னத்திற்கு ஒருவர் என்று ஷேவிங் செய்வத்தில் கூட ஸ்பெஷலிஸ்டுகள் வந்துவிட்ட காலமிது. ஆனால் மேற்படி நியு ஏஜ் குருமார்கள் யோக கற்பிப்பது, பத்திரிக்கைக்கு பத்தி எழுதுவது, CEO க்களுக்கு அட்வைஸ் செய்வது , உலக அமைதியை ஏற்படுத்துவது , ஆஸ்பத்திரி நடத்துவது என்று சகலத்தையும் செய்கிறார்கள். பலர் சிலகாலம் ஆட்டத்தில் இருந்து கல்லா கட்டியவுடன் ஃபீல்ட் அவுட் ஆகிறார்கள். ஆட்டத்தில் தொடருபவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.