Saturday, December 16, 2006

கொள்கைப் பித்து

கொள்கைக்காக மாண்டவர் உண்டு , கொள்கைக்காக வாழ்வின் பல இன்பங்களை தொலைத்தவரும் உண்டு ஆனால் கொள்கையை கடைபிடித்து அதனால் இன்பம் பெற்று வாழ்ந்தவர் உண்டா?

ஒருவரிடம் போய் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்று கேட்டால் "இது என் கொள்கை" என்பார். ஏன் இந்த கொள்கையை கொண்டுள்ளீர்கள் என்று கேட்டால் 'இது சிறந்ததாக எனக்குப் படுகிறது' என்று சொல்வார். அதாவது அவருடைய ரசனை அது, ஒருத்தருக்கு இனிப்பு பிடிக்கும், இன்னொருவருக்கு காரம் பிடிக்கும் , இனிப்பு பிரியரிடம் போய் உனக்கேன் காரம் பிடிக்கவில்லை என்று சண்டை போட முடியாது. மாற்றுக்கொள்கை கொண்டவரும் அது போலத்தான். கொள்கைக்காக சண்டைபோடுவது வீண்வேலை.


'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்கிறார் பாரதியார். அதாவது அடிமைத்தனம் நம்மீது திணிக்கப்படும் ஒன்று , அந்த அடிமைத்தனத்தயே மோகித்திருப்பது அதனினும் கீழான இழிநிலை.

இதனைவிட இழிவான நிலை தானே விரும்பி அடிமையாகி அந்த அடிமைத்தனதை மோகித்திருப்பது. தனக்குத் தானே செய்துகொள்ளும் அடிமைத்தனம் கொள்கைக்கு அடிமையாவது, போதை பொருட்களுக்கு அடிமையாவது போன்றவை. இந்த நிலையை மோகித்திருப்பதால் இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபடுவது நலம்.


அதற்காக கோட்பாடற்று மிருகம்போல் திரிய வேண்டியதில்லை.
கொள்கை உப்பைப்போன்றது , அது இல்லாவிட்டால் வாழ்வு ருசிக்காது, அதிகமகவும் இருக்கக்கூடாது.

2 comments:

கோவி.கண்ணன் [GK] said...

கொள்கை பித்து நல்லா எழுதி இருக்கிங்க இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்.

அதாவது கொள்கை என்ற பெயரில் எல்லாவற்றிற்கும் தெரிந்தே சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டு அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள்.
தொண்டர்கள், குழுமனப்பான்மை இதெல்லாம் இந்த கொள்கை பித்திலிருந்து வருவதுதான். புடிச்ச முயலுக்கு மூனுகாலுன்னு அங்கேயே நிற்பார்கள். சில சமயம் புடிச்சது மானாகக் கூட இருக்கும் ஆனால் முயல் என்றே சொல்லுவார்கள்.

கொள்கைப் பித்து பரிணாமாம் அடைந்து நிலைப்பாட்டில் உறுதி என்ற பிடிவாதமாக மாறிவிடும். இதெற்கெல்லாம் காரணம் தான் விரும்புவது, நம்புவது உயர்ந்ததாக மட்டுமே இருக்கும், இருக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.

பத்மகிஷோர் said...

வருக கோவியாரே! கருத்துக்கு நன்றி . இது பற்றி விரிவாக எழுத எண்ணியுள்ளேன் , நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்றிருக்கிறேன்.