Thursday, November 30, 2006

சோதனை மேல் சோதனை

வாழ்க்கையில் சோதனை இருக்கலாம், ஆனால் சோதனையே வாழ்க்கையாக சிலருக்கு அமைகிறது.

ஜான் லய்ன் , இவர் இங்கிலாந்தில் வசிப்பவர். இவருக்கு இதுவரை 17 விபத்துக்கள் நேர்ந்துள்ளது (கின்னஸ் சாதனையானு தெரியல) .

இவரை இரண்டு முறை மின்னல் தாக்கியுள்ளது, 3 முறை கார் விபத்தில் சிக்கியிருக்கிறார், ஒரு முறை தண்ணீரில் முழுகியிருக்கிறார். ரீசன்டாக வடிவேல் ,விவேக் ஸ்டைலில் சாக்கடையில் விழுந்ததில் எலும்பு முறிந்துள்ளது.

அன்னாரை பற்றிய தகவல்களுக்கு.

பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி இப்போதுதான் உறைக்கிறது.

Monday, November 27, 2006

In Spite of the gods - புத்தக விமர்சனம்



இதை எழுதிய Edward Luce, 5- 6 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஒரு ஆங்கில நிருபர் (Financial Times)

அரசு அதிகாரிகள், சாதி மத அரசியல், குடும்ப அரசியல், காலம்தாழ்த்திக் கழுத்தறுக்கும் நீதிமன்றங்கள், ஊழல், உள்கட்டமைப்பு குறைபாடு, வறுமை, படிப்பறிவின்மை போன்றவற்றை எல்லாம் மீறி இந்தியா எப்படி வளருகிறது என்பதனை பற்றிய புத்தகம்.

நகரங்களுக்கு பெருமளவு குடிபெயர்ந்தாலும் இந்தியர்களுக்கு கிராமங்கள் மீது இருக்கும் தணியாத காதலையும். நகரங்களில் இடக்கரடக்கலாக தொடரும் சாதி அமைப்பையும். புதிய தலைமுறை பணக்காரர்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பணத்தை வாரி இரைப்பதையும் இவற்றுக்கு நடுவே கோர முகம் காட்டும் வறுமையையும் பெண்சிசுக்கொலைகளையும் , எய்ட்ஸ் தாக்குதலையும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

நாட்டில், அர்த்தமற்ற பல வணிக கட்டுப்பாடுகளையும் வரிகளையும், ஊழல் செய்ய ஒரு வாய்ய்பாக கருதி , அதிகாரிகள் தளர்தாமல் விட்டு வைத்திருப்பதையும், அதனால் ஏற்படும் தொழில் வளர்ச்சி பாதிப்பையும் உதாரணங்களுடன் அழகாக குறிப்பிடுகிறார்.
இந்திய கோர்ட்களில் நடக்கும் வழக்குகளால் முடங்கியிருக்கும் சொத்து சுமார் 35,000 கோடியாம்.

அரசியலைப் பொறுத்தவரை இந்திய அரசியல்களத்தை காங்கிரஸ் , பாஜக, மற்றும் பிராந்தியக்கட்சிகள் என்று பிரித்து அலசி கூறப்பட்டுள்ளது. இடதுசாரிகளை பற்றி அவ்வளவாக இல்லை.

இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகளை காஷ்மீருடன் சம்பத்தப்படுத்தி சொதப்பிவிட்டார். ஆனால் முஸ்லிம்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளை ஓரளவு எழுதியிருக்கிறார்.

சில factual errors, உதாரணம், வைசியர்களை நாடாளும் சாதி என்று குறிப்பிட்டு 3- 4 முறை தவறாக வந்துள்ளது. இறுதி அத்தியாயத்தில், இந்திய அரசு என்ன செய்ய வேண்டும், காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும், பாஜக என்ன செய்ய வேண்டும், என்று ஏகத்துக்கும் அட்வைஸ் மழை. இதை தவிர்த்திருக்கலாம். நாட்டின் இன்னொரு பிரச்சனையான தீவிரவாதத்தைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் எழுதப்படவில்லை.

தற்கால இந்தியாவை பற்றி ஒரு நல்ல புத்தகம். படிக்கலாம்.

டிஸ்கி. ஜெயலலிதாவை புகழ்ந்து சில வரிகள் வருவதால் திராவிட அன்பர்கள் இதை தவிர்ப்பது நலம்.

Thursday, November 23, 2006

கோர்ட்டில் தமிழ்

ஐகோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழை அறிமுகப்படுத்த அரசு முடிவிசெய்துள்ளது.
வரவேற்ப்போம். சட்ட சம்பந்தப்பட்ட கோப்புகள் அங்கில அறிவுடையவர்களுக்கே கூட எளிதில் புரியாது, ஒரே gobbledygook ஆக இருக்கும். ஆது போல் கடினமான உரைநடை தமிழில் இல்லாமல் பழகு தமிழில் இருந்தால் இந்த முயற்சி வெற்றி பெரும்.

ஆனால் இது நடக்காது என்று தான் நான் நினைக்கிறேன். வழக்கு நடவடிக்கை பொதுமக்களுக்கு புரியாதவரை தான், வக்கீல்கள் தேவையற்ற சட்டச்சிக்கல்களை எழுப்பி , காலத்தை கடத்தி, பணம் கறக்க முடியும்.

:-)

Tuesday, November 21, 2006

தெய்வங்களையும் மீறி.

எட்வர்ட் ல்யூஸ் எழுதிய "இன் ஸ்பைட் ஆஃப் காட்ஸ்" படித்து வருகிறேன். இந்திய அரசின் செயல்பாடுகளை பற்றி நகைச்சுவையுடன் விரிவாக எழுதியிருக்கிறார்.

2000 ம் ஆண்டு மத்திய இரும்பு அமைச்சகத்திடம் இருந்து ஒரு அவசர மகஜர் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு சென்றது , விஷயம் என்ன வென்றால் , துறை அதிகாரிகள் கோப்புகளில் நீலம் அல்லது கருப்பு நிறத்தில் எழுதவேண்டுமா இல்லை பச்சை / சிகப்பு நிறத்தில் எழுத வேண்டுமா என்ற சந்தேகத்தை போக்குமாறு சீர்திருத்தத்துறையிடம் கேட்டிருந்தது.

நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள் ஒரு குழு அமைத்து 3 வாரம் பேசி , இந்த விஷயத்தில் பர்சனேல் துறையிடம் கருத்து கேட்க முடிவு செய்தனர்.

பர்சனேல் துறை இன்னொரு கமிட்டி அமைத்து 6 வாரம் பேசி, விஷயத்தை பயிற்சித்துறையிடம் கொண்டு சென்றது.

அவர்கள் மேலுமொரு குழு அமைத்து 3 மாதம் பேசி , முதல் முறை எழுதும் போது நீல/கருப்பு பேனாவிலும் திருத்தங்களை செய்யும் போது பச்சை/சிகப்பு பேனாவிலும் எழுதலாம் என்று கருத்து சொன்னது.

எந்தெந்த அதிகாரிகள் பச்சை/சிகப்பு பேனாவில் எழுத "தகுதி" வாய்ந்தவர்கள் என்று கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டு, சில குறிப்பிட்ட "க்ரேட்" அதிகாரிகள் மட்டும் பச்சை/சிகப்பு பேனாவில் திருத்தங்கள் செய்யலாம் என்று வரையறுக்கப்பட்டது.


அன்று முதல் இந்தியாவில் இருந்த வறுமை , பசி, வேலையின்மை எல்லாம் நீங்கி சுபிட்சம் பிறந்தது.

Monday, November 13, 2006

பஸ்களில் பொன்மொழிகள்

அரசு பஸ்களில் கலைஞரின் பொன்மொழிகளை எழுதியது பிரச்சனை ஆகியுள்ளது.

'நான் நீ நாம்' போன்ற பொன்மொழிகளை விட இந்த மாதிரி பொன்மொழிகள் எழுதினால் சிக்கல் இருக்காது.

சரியான சில்லரை கொடுத்து டிக்கட் கேட்டு வாங்கவும். - கலைஞர்

திரும்பும் முன் சிக்னல் செய்யவும் - கலைஞர்

புகை பிடிக்காதீர் - கலைஞர்

கரம் சிரம் புறம் நீட்டாதீர் - கலைஞர்

Friday, November 10, 2006

நிறுவனங்கள் செய்வது நில அபகரிப்பா?

இந்தியாவின் சிறந்த நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனங்கள், மாநில முதல்வர்களை பார்த்து 500 ஏக்கர் நிலம் வேண்டும் , 700 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்பது அன்றாட வாடிக்கையாக போய்விட்டது .


இது தவிர, இப்போதெல்லாம் சிறப்பு பொருளாதார மண்டலம் SEZ என்ற கூத்து வேறு , இது பற்றி வேறு பதிவில்.

ஒரு கேள்வி, சுலபமான கேள்வி தான் , 200- 300 ஏக்கர் நிலத்தை என்ன செய்யப்போகிறாகள்? இந்திய நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்பத்தில் சூரப்புலிகள் என்று கருதிக்கொண்டிருக்கின்றன , அந்த tech savvy தனந்தை கட்டடக்கலையிலும் காட்டலாம்.

1 இலட்சம் பேர் வேலை செய்ய வசதியாக ஐந்து 20 மாடி கட்டிடங்களை கட்டினால் போதும், 20 - 25 ஏக்கரில் வேலை முடிந்துவிடும். பெங்களுர் ITPL வெறும் 70 ஏக்கரில் சிறப்பாக இயங்குகிறது. 20 லட்சம் சதுர அடிக்கு கட்டிடம் இருக்கிறது. சுலபமாக 20000 பேரை தாங்கும்.

இப்படி எளிய வழி இருக்கையில் ஏன் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கேட்கிறார்கள் ?
பலர் சொல்வது போல் கம்பனிகள் நில அபகரிப்பில் (land grab) ஈடுபட்டுள்ளனவா?

பிகு.

இது சில்வர் ஜூபிலி பதிவு. 25 பதிவு போட்டுட்டேன்.

Thursday, November 09, 2006

யார் குற்றம்?

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் கடைகளை மூடி சீல் வைக்க கோர்ட் சொல்லியபின் பலமான போராட்டம் நடக்கிறது. நமக்கு இந்த விஷய்தில் எந்த ஸ்டேக்கும் இல்லாததால் தெளிவாக பார்க்க முயற்சிப்போம்.

டெல்லி மாஸ்டர் ப்ளான் படி சில இடங்களில் வெறும் குடியிருப்புக்கள் தன் இருக்க வேண்டும். கடைகள் வணிக வளாகங்கள் கூடாது. காலப்போக்கில் யாரும் கண்டுகொள்ளாமல் (அல்லது கண்டும் காசு வங்கிக்கொண்டு) விட்டதால் கடைகள் பெருகின. சில கடைகள் 30 ஆண்டுகளாகக் கூட நடக்கின்றன. பலர் விற்பனை வரி, வாட் என்று பல வரிகள் கூட கட்டியுள்ளனர்.


யாரொ ஒருவர் ஒரு பொது நல வழக்கு போட்டதால் , கோர்ட் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.


இதற்கு முழு பொறுப்பு அரசாங்கமும், அரசு ஊழியர்களும் தான், கடைகளை கட்டும் போதே தடுக்கத்தவறிய அதிகாரிகளையிம், ஊழியர்களயும் கைது செய்து , வழக்குத்தொடரவேண்டும். அவர்களின் வேலையை பறிக்க வேண்டும்.

முறையான அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படும் போது கம்மென்று இருந்துவிட்டு கோர்ட் சொன்ன பிறகு இடித்துதள்ளுவது வெறும் பம்மாத்து வேலை. ஒவ்வொரு வார்டிலும் உள்ள அதிகாரிகள் தங்கள் பகுதியில் முறையின்றி கட்டடங்கள் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது . அப்படி ஏதாவடு கட்டப்பட்டால் தடுக்க வேண்டும் .


இவ்வாறு அவர்கள் பணியை செய்ய தவறிவர்களை கைது செய்தால் என்ன?

Monday, November 06, 2006

உங்கள் அறிவுக்கு சவால்!

பெங்களுரின் பிக் FM எனப்படும் ஒரு அற்புத பண்பலை அலைவரிசையில் பல அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்கிறார்கள்.

உதாரணம் , வீரேந்தர் சேவாக்கின் ஃபர்ஸ்ட் நேம் என்ன,
1 ராகுல் 2 சச்சின் 3 யுவராஜ் 4 வீரேந்தர்

மசால் தோசையின் உள்ளே இருப்பது என்ன
1. வெண்டைக்காய் 2. உருளை 3. கத்திரிக்காய்.





இந்த கேள்விகளை பார்க்கும் போது முன்பு சன் ம்யூஸிக்கில் இரவு 9 மணிக்கு ஹேமா சின்ஹாவின் கேள்விகள் நினைவுக்கு வருகிறது,


ஹேமா சின்ஹா - `0` வை கண்டுபிடித்தது யாரு?
நேயர் - க்ளூ குடுங்க
ஹேமா சின்ஹா - நம்ம நாட்டுக்காரங்களை இப்படி அழைப்பார்கள்
நேயர் - இந்தியர்கள்
ஹேமா சின்ஹா - சரியான பதில்


ஹேமா சின்ஹா - கல்லை தின்னும் பறவை எது?
நேயர் - க்ளூ குடுங்க
ஹேமா சின்ஹா - நெருப்புனு ஆரம்பிச்சு ழினு முடியும்.
நேயர் - நெருப்புக்கோழி
ஹேமா சின்ஹா - சரியான பதில்

ஹேமா சின்ஹாவிற்க்காக ஒருவர் வலைப்பூ வேற ஆரம்பிச்சிருக்கார், அவர் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள். படத்தை அவரிடமிருந்து தான் சுட்டேன்.

Thursday, November 02, 2006

டெலி மார்கெட்டிங் சமாளிப்பு ஐடியா இலவசம்

டெலி மர்க்கெட்டிங் தொடர்பாக டோண்டு அவர்கள் எழுப்பிய கேள்விகள் digress ஆகி விவாதம் எங்கோ சென்றது, டெலி மார்கெட்டிங் ஒரு எரிச்சலூட்டும் விஷயம் என்ற பூர்வ பக்ஷம் மறக்கடிக்கபட்டுள்ளது.

'உங்களுக்கு வீட்டு லோன் வேண்டுமா?' என்று போனில் கேட்கிறார்கள், வீடு வாங்குவது பெரிய விஷயம்.
வீடு வாங்குபவர் அதற்கு வேண்டிய பணத்தேவைகள் , கடன் கொடுக்கும் நிறுவனங்கள், வட்டி விகிதம், இன்ன பிற சமாச்சாரங்களை கணக்கிட்டு தான் அடுத்த அடியை எடுத்து வைப்பார்.

'லோன் வேண்டுமா ?' என்று போன் வருகிறதே சரி வீடு வாங்குவோம் என்று யாரும் முடிவெடுப்பதில்லை. பிறகு ஏன் வீணாக போன் செய்கிறார்கள்.

இன்சூரன்ஸ் , கார் லோன் , போன்றவையும் நெடு நாளைய திட்டங்கள் ஆதலால் ஒரு போனுக்கெல்லாம் யாரும் மசிய மாட்டார்கள்.

சமீபத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது , டாக்டர் ராதகிருஷ்ணன் சலையில் உள்ள ஒரு சிறிய ஐஸ்க்ரீம் கடையில் மதியம் 2 மணிஅளவில் இரு ட்ராபிக் போலீஸ்காரர்கள் ஓய்வு எடுத்துக்கோண்டிருந்தனர்.

அப்போது ஒருவரின் செல்பேசிக்கு ஒர் டெ.மா. கால் வந்தது , கடுப்பான போலிஸ்காரர் 'இவ்வளவு நேரம் வெய்யில்ல இருந்துட்டு கொஞ்சம் உக்காந்தா இப்டி போனா பண்றிங்க' என்று துவங்கி அவருக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தை ப்ரயோகங்களையும் செய்து முடித்தார்.


டெலி மார்கெட்டிங் உபத்திரவங்களை சமாளிப்பதற்காக நான் ஒரு எளிய உபாயம் வைத்துள்ளேன்.

வீட்டு லோன் , கார் லோன், க்ரெடிட் கார்ட், க்ள்ப் மெம்பர்ஷிப் போன்ற எந்த போன் வந்தாலும் , 'நான் அடுத்த வாரம் அமெரிக்கா போறேன் , திரும்பி வர 6 மாசம் ஆகும் , அப்புறம் பாக்கலாம்' என்று ஒரே போடாக போட்டு விடுவேன் .
அவர்கள் அப்பீட் ஆகிவிடுவார்கள்.

ஆகவே வலையுலக தமிழ் நண்பர்களே , உங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா கொடுத்துள்ளேன் . வேறு யோசனை இருந்தால் பின்னூட்டமாக இடுங்கள்.